விநாயகர் சதுர்த்தி விழா இன்று தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் மக்கள், களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை வாங்கி, பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். பல மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிப்பட்டு வரும் நிலையில், பிள்ளையார்பட்டி போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களிலும் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக விநாயகருக்கு பணமாலைகள், கொழுக்கட்டை மாலைகள், பூக்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றதால், இந்த ஆண்டு நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் ஆவணியில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும், அந்த வருடத்தின் பிரபலமாக உள்ளவற்றை வைத்து விநாயகர் சிலைகள் செய்து விறபனைக்கு வருவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் மிகவும் பிரபலமான படமான RRR உருவத்தில் விநாயகர் சிலைகளும், நடிகர் ரஜினியின் அடுத்த படமான ஜெயிலர் வடிவிலான விநாயகர் சிலைகளும் இந்த ஆண்டு புது வரவாக விற்பனைக்கு வந்துள்ளது.
மேலும் பல வண்ணங்களிலும், சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும் விநாயகர் சிலைகள் வடிவமைக்க நெறிமுறைகள் வழங்கப்பட்டது. அதன்படி உருவாகியுள்ள விநாயகர் சிலைகளை கொண்டு நடத்தப்படும் ஊர்வலங்கள், அமைதியுடன், நடப்பதை உறுதிபடுத்தும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். மேலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள 108 விநாயகர் கோவிலில் தென் தமிழகத்திலேயே மிகப்பெரிய பிரம்மாண்ட 32 அடி உயர விநாயகருக்கு 2000 தென்னை கன்றுகள் வைத்து அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தென் மாநிலங்களில் பிரசித்தி பெற்ற 108 விநாயகர் கோவிலில் உள்ள ஒரே கல்லினால் ஆன 32 அடி உயர விநாயகருக்கு இன்று சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. மேலும் சிலை பிரகாரம் முழுவதும் 2000 தென்னை மரக்கன்றுகள், பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்து. கண்ணைக் கவரும் வகையில் பசுமையாக காட்சியளித்தது. அதேபோல் அருகில் உள்ள 108 விநாயகர் சிலைகளும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 32 அடி உயரம் கொண்ட இந்த பிரம்மாண்ட விநாயகரை திண்டுக்கல் மட்டுமில்லாது அண்டை மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.