504 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

504 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

தமிழ்நாட்டில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் நாள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போதைப் பொருட்களை தொடர்ந்து கடத்தி வருபவர்க ளின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்தார்.

சென்னையில் போதைப் பொருள் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களிடம் இருந்து ஒரு கிலோவுக்கு மேல் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டால், அவர்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை, ஒரு கிலோவுக்கு மேல் போதைப் பொருள் கைப்பற்றிய வழக்குகளில் 1,351 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 908 பேரின் சொத்து மற்றும் வங்கிக் கணக்குகள் விவரங்களை சேகரித்து அவற்றை சட்ட ரீதியாக முடக்கும் பணி நடைபெறுகிறது.

இதில் முதல் கட்டமாக 504 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. கடந்த ஆகஸ்ட் 24 அன்று ஒரே நாளில் 34 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. சென்னையில் போதைப் பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்வதுடன் அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கும் நடவடிக்கையும் தொடர்ந்து எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.