பழச்சாறு குடித்த 6 வயது குழந்தை உயிரிழப்பு....

திருப்பூர் பல்லடம் அருகே பழச்சாறு குடித்த 6 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

பழச்சாறு குடித்த 6 வயது குழந்தை உயிரிழப்பு....

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்னூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த குட்டூ குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களது மூன்று குழந்தைகளுடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.  

இந்த நிலையில் நேற்று மாலை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குட்டூ குமார் பல்லடம் பேருந்து நிலையத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது குட்டூ குமாரின் மனைவி சுஹாந்தி தேவி அங்குள்ள ஜூஸ் கடை ஒன்றில் பழச்சாறு வாங்கி குழந்தைகளுடன் தானூம் பருகி விட்டு கணவர் வருகைக்காக காத்திருந்துள்ளார்.

பின்னர் அங்கு வந்த கணவருடன் வீடு திரும்பி உள்ளனர். இதற்கிடையில் நேற்று நள்ளிரவு முதல் குட்டூ குமாரின் மூத்த மகன் தன்னூ குமாரின் உடல் நிலை திடீரென பாதிக்கப்பட்டு வாந்தியும் வயிற்று போக்கும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மிகவும் கவலைக்கிடமான நிலையில் தள்ளப்பட்ட சிறுவன் தன்னூ குமாரை அவனது பெற்றோர் இன்று காலை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு சிறுவனின் உடலை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்த விட்டார் என தெரிவித்ததாக தெரிகிறது.

தகவல் அறிந்து அங்கு சென்ற பல்லடம் போலிசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், சிறுவனின் இறப்புக்கு காரணம் என்ன ? பழச்சாறு குடித்ததால் தான் இறந்தானா? என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.