கொரோனா பாடியை வாங்கவே ரூ.5,000 லஞ்சம்... நிவாரண நிதியை பறிக்க அதிகாரிகள் முயற்சி!

சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளின் உறவினர்களிடம் பணத்திற்காக பேரம் பேசுகின்றனர் சுகாதார ஊழியர்கள்

கொரோனா பாடியை வாங்கவே ரூ.5,000 லஞ்சம்... நிவாரண நிதியை பறிக்க அதிகாரிகள் முயற்சி!
கொரோனாவால் தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் இறந்து வரும் நிலையில், இந்த இக்கட்டான சூழலிலும் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடலை வைத்து காசு பார்க்கும் நபர்களை என்ன செய்வது?
 
ஒன்றுக்கு மூன்று தடுப்பூசி வந்த பிறகும் இந்த கொரோனாவின் கோரத்தாண்டவம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் பாதித்தவர்களும், இறப்பவர்களும் அதிகரித்த வண்ணம் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளின் உறவினர்களிடம் பணத்திற்காக பேரம் பேசுகின்றனர் சுகாதார ஊழியர்கள். 
 
வேலூர் அரசு மருத்துவமனையில் பிணவறைக்கு அருகிலேயே பென்ஞ் போட்டு அமர்ந்துள்ள சுகாதார ஆய்வாளர்கள், டோக்கன் கொடுத்தால் தான் உடலை இலவச ஆம்புலன்ஸில் ஏற்ற முடியும் என்பார்களாம். சரி டோக்கன் பெற்று வரலாம் என்று சென்றால் அங்கு அந்த தம்மாதுண்டு சீட்டிற்கு ரூ.2,000 முதல் ரூ. 5,000 வரை லஞ்சம் கொடுக்க வேண்டுமாம். அப்படி தரவில்லை என்றால், இறந்தவரின் உடல் பல மணி நேரம் பிணவறையிலேயே பலமணி நேரம் கிடக்கும் அவலம் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 
 
மூன்று முறை ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்த பிறகும் பெஞ்சிற்கு மற்றொரு ஆள் வருகிறாரே தவிர லஞ்சம் வாங்குறது குறையவே இல்லை என்கின்றனர் பாமர மக்கள். கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் பணம், டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாது இதுபோன்று வசூல் செய்யப்படுவது வேதனைக்குரியது.