கூலிதொழிலாளியை கொல்ல முயன்ற தாய், மகன் உள்ளிட்ட மூவருக்கு 4 ஆண்டு சிறை

இடப்பிரச்சனை மற்றும் முன்விரோதம் காரணமாக தொழிலாளியை கொலை செய்ய முயன்ற தாய், 2 மகன்கள் ஆகிய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கூலிதொழிலாளியை கொல்ல முயன்ற தாய், மகன் உள்ளிட்ட மூவருக்கு 4 ஆண்டு சிறை

நீலகிரி மாவட்டம் உதகை நொண்டிமேடு பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவரது மனைவி விசாலாட்சி (வயது 49). இவர்களுக்கு ரஞ்சித் (30), உதயகுமார் (28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கும், வீட்டு அருகே உள்ள கூலி தொழிலாளியான வினோத் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. 

இதற்கிடையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்று மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.  இதனால் ஆத்திரமடைந்த விசாலாட்சி அவரது மகன்கள் ரஞ்சித், உதயகுமார் ஆகியோர் வினோத் என்பவரை கத்தியால் வெட்டி தாக்கியுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் உதகை நகர மத்திய போலீசார் தாய் உள்பட 2 பேர் மீது கொலை முயற்சி உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு இன்று கூறப்பட்டது. உதகை சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை கொலை செய்ய முயற்சித்த தாய் விசாலாட்சி, அவரது மகன்கள் உதயகுமார், ரஞ்சித் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் ரஞ்சித்துக்கு ரூ.2,500, விசாலாட்சி மற்றும் உதயகுமாருக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். பின்னர் 3 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர்.