பாலியல் வழக்கில் சிக்கிய ஆசிரியரை தண்டிக்கலாம் ஆனால், அந்த பள்ளி நிர்வாகத்தைக் குற்றம் சுமத்துவது ஏன்? ஹெச்.ராஜா கேள்வி

பாலியல் வழக்கில் சிக்கிய ஆசிரியரை தண்டிக்கலாம் ஆனால், அந்த பள்ளி நிர்வாகத்தைக் குற்றம் சுமத்துவது ஏன்?  ஹெச்.ராஜா கேள்வி

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பள்ளி ஆசிரியரைத் தூக்கில் போடலாம். ஆனால், அதற்காக அந்த நிர்வாகத்தைக் குற்றம் சுமத்துவது ஏன்? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, புதிய அரசின் முதல் பட்ஜெட் வரட்டும், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நிதி ஆளுமை பற்றிப் பேசலாம். ஜக்கி வாசுதேவை மரியாதைக் குறைவாகப் பேசியதைத்தான் கண்டித்தேன் என்றிம்  பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பூர்வீகம் குறித்து நான் பேசவில்லை என்றார், அவர் எதற்காக இந்து கோயிலுக்கு எதிராகப் பேச வேண்டும் என்றுதான் கேட்கிறேன். இவர்களின் எந்த மிரட்டலுக்கும் நான் பயப்பட மாட்டேன்.

மே மாதம் 2-ம் தேதிக்கு பிறகு கொரோனா பாதிப்பு 2 மடங்காக உயர்ந்துள்ளது. அதனால் இன்னும் எச்சரிக்கையாகத் தமிழக அரசு செயல்பட வேண்டும் என கூறிய ஹெச்.ராஜா, கொரோனா தடுப்பூசி நம்பகத்தன்மை குறித்து சந்தேகத்தை எழுப்பியவரே முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என்றார். 

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பள்ளி ஆசிரியரைத் தூக்கில் போடலாம். ஆனால், அதற்காக பள்ளி நிர்வாகத்தைக் குற்றம் சுமத்துவது ஏன்? இதற்கு முன்பாக எஸ்ஆர்எம் கல்லூரி உட்பட பல்வேறு பள்ளி, கல்லூரிகள் குறித்து இதுபோன்ற குற்றசாட்டுகள் வந்தபோது யாரும் நிர்வாகம் குறித்துப் பேசவில்லை. தற்போது ஏன் பேச வேண்டும்?.இவர்கள் கண்ணோட்டத்தில் பாரபட்சம் இருக்கிறதோ? இதற்கு முன்பு நடந்த சம்பவங்களில் கனிமொழி வாய் திறந்தாரா? திமுகவில் இருக்கும் முன்னணித் தலைவர்களே இந்த அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்துகின்றனர் என ஹெச்.ராஜா கூறினார்.