செல்போன் டவரில் ஏறி குதிப்பதாக பதைபதைக்க வைத்த வாலிபர்...

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த முருகன் என்பவர் அடிக்கடி டவர் மீது ஏறி மிரட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

செல்போன் டவரில் ஏறி குதிப்பதாக பதைபதைக்க வைத்த வாலிபர்...

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்தவர் வாலிபர் முருகன். இவர் எப்போது எல்லாம் குடும்ப பிரச்சனை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் போதையில் செல்போன் டவரில் ஏறி குதிப்பேன் என கூறி மக்களை தன் பக்கம் ஈர்க்கும் திறமை தன்னம்பிக்கை  கொண்ட வாலிபர் தான் இந்த முருகன். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கட்டட தொழிலாளியான இவரது தம்பி கடந்த சில நாட்களுக்கு முன்பு டூவீலரில் செல்லும்போது விபத்துக்குள்ளாகி காலை இழந்துள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி போதையில் காரைக்குடி அம்பேத்கர் சிலை அருகே உள்ள செல்போன் டவரில் ஏறி நின்று தனது தம்பியின் மருத்துவ செலவுக்காக ரூ.5 லட்சம் வேண்டும், விபத்துக்குள்ளானவர்கள் மீது எப்.ஐ.ஆர். போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி குதித்து  தற்கொலை செய்து விடுவதாக மிரட்டினார். சுமார் மூன்று மணிநேரமாக டவரில் நின்றதால், அவர் கீழே விழுவாரா? மாட்டாரா? என்பதை பார்க்க அந்த பகுதியில் சுமார்  500 க்கும் மேற்பட்டோர் கூடினர்.

புதுவருட திருவிழா போன்று கூட்டம் கூடியதை பார்த்த போலீசார் செய்வதறியாது திகைத்தனர். அவரை காப்பாற்ற தீயணைப்பு துறையினர் மற்றும் உறவினர்களும் டவரில் ஏறி பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் அவரது மனைவி, பிள்ளைகள் வந்து கீழே இறங்கி வருமாறு கூறியபின் அவர் இறங்கி வந்தார். ஏற்கனவே இந்த முருகன் இரண்டு முறை இதே போன்று செல்போன் டவரில் ஏறி நின்று தற்கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.