'டாட்டூ' போட்டுக் கொள்ள ஆசைப்பட்ட இளைஞர்.. நூதன முறையில் காரில் கடத்திய மர்ம நபர்கள்!!

'டாட்டூ' போட்டுக் கொள்ள ஆசைப்பட்ட இளைஞர்.. நூதன முறையில் காரில் கடத்திய மர்ம நபர்கள்!!

சென்னை மதுரவாயல் அருகே காரில் கடத்திச் சென்று இளைஞரை தாக்கி அவரிடம் இருந்து பணம், லேப்டாப் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறப்பாக டாட்டூ போடுவதாக கூறி நபர்கள்

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கனடாவில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்காக சென்னைக்கு வந்த இவர், “டாட்டூ” வரைய வேண்டும் என்பதற்காக வடபழனியில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த இருவர், இதைவிட சிறப்பாக டாட்டூ வரையும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறோம் எனக்கூறி விக்னேஷை காரில் கூட்டிச் சென்றுள்ளனர்.

நூதன முறையில் இளைஞரை காரில் கடத்திய மர்ம நபர்கள்

கோயம்பேடு பகுதிக்கு வந்தபோது மேலும் 2 பேர் காரில் ஏறியுள்ளனர். கார், மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்ற போது, 4 பேரும் சேர்ந்து விக்கியை சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்து ரூ. 60 ஆயிரம் பணம், ஏடிஎம் கார்டு, செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டனர்.

திரைப்பட பாணியில் காரில் இருந்து வெளியில் தள்ளப்பட்ட சோகம்

பின்னர் போரூர் சுங்கச்சாவடி அருகே சென்ற போது விக்கியை சரமாரியாக தாக்கி காரிலிருந்து தள்ளிவிட்டு விட்டு 4 பேரும் தப்பியோடி விட்டனர். இதனையடுத்து, விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்ம நபர்கள் 4 பேரை தேடுகிறது காவல்துறை

இதனிடையே, பைபாஸ் சாலைகளில் வழிப்பறி செய்து விட்டு தப்பியோட வசதிகள் அதிகம் இருப்பதே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மதுரவாயல், போரூர், வானகரம், அய்யப்பன்தாங்கல் பகுதிகளில் தொடர் கதையாகி வரும், கடத்தல், வழிப்பறி போன்ற நிகழ்வுகளை தடுக்க காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.