ஆடி 18: களையிழந்த ஆற்றங்கரைகள்; வெறிச்சோடிய படித்துறைகள்!  

திருச்சியில் இரண்டாவது ஆண்டாக ஆடிப் பெருக்கு நாளில் காவிரிக் கரைகள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஆடி 18: களையிழந்த ஆற்றங்கரைகள்; வெறிச்சோடிய படித்துறைகள்!   

திருச்சியில் இரண்டாவது ஆண்டாக ஆடிப் பெருக்கு நாளில் காவிரிக் கரைகள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழ் மாதங்களில் பெண்களுக்கு உகந்ததாகக் கருதப்படும் ஆடி மாதத்தின் முக்கிய நாளான ஆடி 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காவிரியாற்றின் கரைகள் மற்றும் படித்துறைகளில் பொதுமக்கள் கூடி புனித நீராடி, பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவர். புதுமணப் பெண்கள் கணவருடன் வந்து நீராடி, புத்தாடை அணிந்து தாலிக் கயிறு மாற்றும் வைபவத்திலும் ஈடுபடுவர். காவிரிப் படித்துறைகளில் பெண்கள் வாழை இலையில் பழம், பூ, பனை ஓலை, மஞ்சள் கயிறு உள்ளிட்டவற்றை வைத்து தண்ணீருக்கு வழிபாடு நடத்துவர். ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒருவருக்கொருவர் புதிய மஞ்சள் கயிறுகளை அணிந்து கொள்வர். புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடுகள் செய்து, புதிய தாலிக் கயிறு மாற்றிக் கொள்வதுடன், திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விடுவர்.

ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு ஆகிய நாள்களில் காவிரியின் பிற கரைகளைக் காட்டிலும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கூடி வழிபடுவது வழக்கம். இதையொட்டி, அரசுத் துறைகள் சார்பில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அம்மா மண்டபம் மட்டுமின்றி காந்தி, ஓடத்துறை, தில்லைநாயகம், அய்யாளம்மன் உள்ளிட்ட காவிரியாற்றின் பிற படித்துறைகளிலும் மக்கள் வழிபாடு நடத்துவர். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக இந்த காட்சிகளை காண முடியவில்லை.