300 அடி ஆழ கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து.. மீட்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்திய மீட்புக்குழு?

விபத்து நடைபெற்ற குவாரியில் மீண்டும் பாறைகள் சரிந்து வருவதால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கியுள்ளது. 

300 அடி ஆழ கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து.. மீட்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்திய மீட்புக்குழு?

நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் உள்ள 300 அடி ஆழம் கொண்ட தனியார் கல் குவாரியில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கற்களை அள்ளும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக ராட்சச பாறை சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளிகள் கற்களின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடும் போராட்டத்திற்கு பிறகு ஆறு பேரில் விஜய் மற்றும் முருகன் ஆகிய இருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

 இதனை தொடர்ந்து, சுமார் 17 மணி நேர போராட்டத்திற்குப் பின், செல்வம் என்பவர் மீட்கப்பட்டு உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் எஞ்சிய 3 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கற்களுக்கு இடையே சிக்கியிருக்கும் 3 பேரை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரண்டு குழுக்களாக பிரிந்து மீட்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகள் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்நிலையில் கற்குவியலில் சிக்கிய நபர்களை மீட்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மீட்புக்குழுவினர், பாறைகள் சரிந்து மேலும் விபத்து  ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் மீட்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டு மீட்பு உபகரணங்களுடன் வெளியேறி விட்டதாக கூறினர்.

இதனிடையே கல்குவாரி விபத்தில்  சிக்கி உயரிழந்த 3 பேரின் உடல்களை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.