வாடிவாசலில் முகூர்த்தக்கால்... தயாராகும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது
ஜல்லிக்கட்டு:
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வழக்கமான பணிகளை தொடங்கியுள்ள நிலையில், போட்டியை நடத்த அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகரிடம் ஊர் கமிட்டி சார்பாக மனு அளிக்கப்பட்டது. அதன்படி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதி நடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3 நாட்கள்:
தை முதல் நாள் முதல் தொடங்கி மூன்று நாட்கள் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளும், காளையர்களும் தயாராகி வருகின்றனர். மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் புகழ் பெற்றவை.
முகூர்த்தக்கால்:
ஜனவரி 17 ஆம் தேதி நடைபெறவுள்ள உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக, வாடிவாசல் அருகில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வாடிவாசலில் வர்ணம் தீட்டுவது கேலரி அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க: சுற்றுலா பயணிகள் முன்னே குட்டியை ஈன்ற திமிங்கலம் - இணையத்தில் வைரலாகும் வீடியோ
முதல் பரிசு:
இப்போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு அன்பளிப்புகள் மிகப்பெரிய அளவில் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி, அதிக காளைகளை அடங்கி ஜல்லிக்கட்டில் முதலிடம் பெறும் வீரருக்கு கார் பரிசளிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
உடல் தகுதி சான்றிதழ்:
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள காளைகளை பரிசோதித்து மருத்துவ சான்றிதழ் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காளைகளுக்கு மூன்றரை வயது நிரம்பி இருக்க வேண்டும். காளை உரிமையாளரின் ஆதார் எண் ஆகியவை கொடுத்த பின்னர் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை வைத்துதான் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முன்பதிவு செய்ய முடியும். பொங்கல் நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டுக்கான எதிர்பார்ப்பும் ஆரவமும் அதிகரித்து வருகிறது.