10% இடஒதுக்கீடு குறித்து அனைத்துக்கட்சி கூட்டம்...! பாஜக பங்கேற்கிறதா...?

10% இடஒதுக்கீடு குறித்து அனைத்துக்கட்சி கூட்டம்...! பாஜக பங்கேற்கிறதா...?

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தொடர்ந்து, எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைப்பெற உள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, கடந்த 8ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்தில், அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 8ம் தேதியே, அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே கடிதம் எழுதினார். அதில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அதிமுக, பா.ஜ.க  இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. திமுக சார்பில்  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி; காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, அசன் மௌலானா; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல் திருமாவளவன், ரவிக்குமார்; பாமக சார்பில், வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ, வழக்கறிஞர் பாலு; மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி, சின்னத்துரை; இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், தளி ராமச்சந்திரன், மாரிமுத்து; மதிமுக சார்பில் டாக்டர் பூமிநாதன், சதன் திருமலை குமார்; மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, அப்துல் சமது; தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேல்முருகன்; கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சின்ராஜ் எம்.பி,  சூரியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

மேலும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க : இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல்....! இன்று வாக்குப்பதிவு...!