தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்...காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்...!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்...காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்...!

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்:

சுதந்திரதின 75 ஆம் ஆண்டு , அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி அணிவகுப்புக்கு அனுமதி கோரி சென்னையை சேர்ந்த சுப்ரமணியன் உள்ளிட்ட 9 பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

காவல்துறைக்கு அதிகாரமில்லை:

அவர்கள் அளித்த மனுவில், அணிவகுப்பு ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும்,  அனுமதி மறுக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் பேண்டு வாத்தியம் முழங்க ஊர்வலம் செல்ல தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டது. 

இதையும் படிக்க: எஸ்.பி. வேலு மணியின் டெண்டர் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு...இறுதி விசாரணை எப்போது?

மனுதாரர்கள் தகவல் அளிக்கவில்லை:

இந்த மனுவானது  நீதிபதி ஜி. கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, எந்த பாதையில் ஊர்வலம் செல்கிறார்கள் என்ற தகவல் அளிக்கவில்லை என காவல்துறை தரப்பில்  தெரிவிக்கப்பட்டது, ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்பக் கூடாது என்றும், காயம் ஏற்படுத்தும் வகையிலான எந்த பொருட்களுக்கும் அனுமதியில்லை என்றும் கூறப்பட்டது. சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் ஆகியவை காக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவை தொடர்பான எந்த உறுதியையும், மனுதாரர்கள் தரப்பில் இருந்து காவல்துறையிடம் தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும்  காவல்துறை கூறும் விதிகளை பின்பற்றுவதாக உறுதி அளித்தால், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறைக்கு உத்தரவு:

இதனையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு  செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அணிவகுப்பு ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் கூறி வழக்கை நீதிபதி  ஒத்தி வைத்தார்.