பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது...! வினோத முறையில் மக்கள் போராட்டம்...!

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது...! வினோத முறையில் மக்கள் போராட்டம்...!

பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே வினோதமான முறையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அடுத்த இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றி 13 கிராமங்கள் ஒன்றிணைந்து 4,750 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டு புதிய விமான நிலையம் அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து,  புதிய விமான நிலையம் அமைப்பதற்கு  எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 263வது நாளாக தொடர்ந்து பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஐந்து முறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றினர். இவ்வாறிருக்க, அண்மையில் கடந்த 8 ஆம் தேதி சென்னைக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் துவக்கி வைப்பதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். அப்போது 
பல்லாவரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட போது கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்,  பரந்தூர்  புதிய விமான நிலையம் திட்டத்திற்காக நிதி உதவி கேட்டது ஏகனாபுரம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும்  படிக்க  | இந்தியால் தமிழை அழிக்க நினைத்தவர்...அது முடியாது என்பதை உணர்ந்தார் - வைகோ பேட்டி!

இந்த நிலையில் இன்று ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே மொட்டை அடித்து கொண்டும்,  காதில் பூ வைத்துக்கொண்டும்,  நெற்றியில் திருநாமம் இட்டும், கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்துகொண்டும் மக்கள் வினோதமான முறையில் போராட்டங்கள் நடத்தினர். 

சுமார் 200க்கும் மேற்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் வேணாம் வேணாம் விமான நிலையம் வேண்டாம், விமான நிலையம் திட்டத்தை கைவிடக் கோரியும், காப்போம் காப்போம் விவசாயத்தை காப்போம் உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாரு பேரணியாக வந்து பரந்தூர் ஏகனாபுரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த சோகண்டி காஞ்சிபுரம் செல்லும் அரசு பேருந்தில் சிலர் ஏறி திருவோடு ஏந்தி பிச்சை எடுத்தனர். அதனை தொடர்ந்து பெண்கள் ஒன்று கூடி ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதையும் படிக்க |நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்திற்கு..நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்!