மேற்கூரை இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி.. பாதுகாப்பற்ற சூழலில் குழந்தைகள் - அச்சத்தில் பெற்றோர்

போச்சம்பள்ளி அருகே அங்கன்வாடி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் குழந்தைகளின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.

மேற்கூரை இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி.. பாதுகாப்பற்ற சூழலில் குழந்தைகள் - அச்சத்தில் பெற்றோர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மாரி செட்டிஅள்ளி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில், மாரிசெட்டிஅள்ளி, பாறையூர், கொட்டாவூர், உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த அங்கன்வாடி மையக் கட்டிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கட்டடம் பழுதாகியதால், 
கடந்த 2015-ம் ஆண்டு, 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், கட்டடம் புதுப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது, அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையில், சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. மேற்கூரை மற்றும் சுற்றுச் சுவரில் காரைகள் பெயர்ந்து, உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு மேசமான நிலையில் உள்ளது.

அடிக்கடி மேற்கூரையில் இருந்து சிமெண்ட் பூச்சுகள் விழுந்து வருவதால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு அற்ற சூழல் நிலவி வருகிறது.  இதனால், குழந்தைகளின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். எனவே, கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும் என்றும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.