விஷச்சாராயத்தால் மீண்டும் ஒரு பலி..! திண்டிவனத்தில் பொதுமக்கள் சாலை மறியல்..!

விஷச்சாராயத்தால் மீண்டும் ஒரு பலி..!  திண்டிவனத்தில்  பொதுமக்கள் சாலை மறியல்..!

திண்டிவனம் அடுத்த கோவடி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் அர்ஜுனன் என்பவரது மகன் சரவணன் (53). இவர் நேற்று இரவு அந்தப் பகுதியில் விற்கப்பட்ட விஷச்சாராயத்தைக்  குடித்ததாகக்  கூறப்படுகிறது.  இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் காணப்பட்ட அவரைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கள்ளச்சாராயத்தை தடுக்க கோரியும், கள்ளச்சார வியாபாரியை கைது செய்ய கோரியும் திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர் .

இதுகுறித்து தகவல் அறிந்து, திண்டிவனம்  வட்டாட்சியர் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர் அங்கிருந்து கலைந்து  சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிக்க     } "மக்கள் வரிப்பணத்தை வைத்து எப்படி முதல்வர் நிவாரணம் வழங்கலாம்?'' சீமான் கேள்வி!

ஏற்கனவே மரக்காணத்தில் விஷச்சாராயம் அருந்தி 15-க்கும் மேற்பட்டோர் பலியாகி 50-க்கும் மேற்பட்டோர் தீவிர  சிகிச்சையில் இருக்கும் நிலையில், இந்தப் பகுதியில் மீண்டும் ஒரு கள்ளச்சாராய பலி ஏற்பட்டிருப்பது, இப்பகுதியில் உள்ள பொது மக்களை அதிர்ச்சி அடையச்  செய்துள்ளது. எனவே காவல் துறையினர் பெயரளவில் கள்ளச்சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல்,  கள்ளச்சாராயம் விற்கும் வியாபாரிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், அதுவே   கள்ளச்சாராயத்தினை முற்றிலும் அழிப்பதற்கான வழி என பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். 

இதையும் படிக்க     } தொடரும் கள்ளச்சாராயக் கொலைகள்...! புதிதாக முளைக்கும் போலி மதுபானக் கடைகள்...!