தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை... அரசு அலுவலகங்களில் அதிரடி ரெய்டு...

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு துறை அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், லட்சக்கணக்கான ரொக்கப்பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை... அரசு அலுவலகங்களில் அதிரடி ரெய்டு...

தீபாவளி பண்டிகை நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து கட்டாயமாக நடைபெறும் வசூல் வேட்டையை தடுப்பதற்காக, தமிழகம் முழுவதும் சார்பதிவாளர், நகராட்சி, ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், டாஸ்மாக் கடைகள் என பல்வேறு துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

இதில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் மற்றும் பரிசு பொருட்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகத்தில், கணக்கில் வராத 20 ஆயிரம் ரூபாய், 30 பட்டாசு கிப்ட் பாக்ஸ்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம்  பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளில், காவல் துணை கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, கணக்கில் வராத 31 ஆயிரத்து 680 ரூபாய் மற்றும் சட்டவிரோதமாக குடோனில் பதுக்கி வைத்திருந்த 6 லட்சத்து 47 ஆயிரத்து 180 ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக டாஸ்மார்க் மேற்பார்வையாளர் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அங்கிருந்த ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை சரி பார்த்தனர். அப்போது கணக்கில் வராத 60 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 புரோக்கர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் வள்ளலாரில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை செய்தனர். முதல் கோட்ட இணை இயக்குனர் அலுவலகத்தில் 2 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதனாடல லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.