அரசுக்கும், காவல்துறைக்கும் தெரிந்தே குற்றங்கள் நடைபெறுகிறதா? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

அரசுக்கும், காவல்துறைக்கும் தெரிந்தே குற்றங்கள் நடைபெறுகிறதா? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

அரசுக்கும், காவல்துறைக்கும் தெரிந்தே குற்றங்கள் நடைபெறுகிறதா என அவர் எடப்பாடி பழனிச்சாமி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம், செங்கல்பட்டு  மாவட்டங்களில் விஷச்சாராயம் அருந்தி  22 பேர் உயிரிழந்ததை அடுத்து, தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு சீர்க்கெட்டுள்ளதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து புகார் அளிப்பதற்காக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் பேரணியாக சென்றனர். சென்னை, சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகை வரை நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புகார் மனு ஒன்றை அளித்தார். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு, விஷ சாராய மரணங்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அம்மனுவில் குறிப்பிட பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஆளுநருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். எங்கெல்லாம் போலி மதுப்பானங்கள் விற்க படுகிறதோ அந்த இடங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், மீண்டும் இரண்டு பேரின் உயிரை இழந்திருக்க மாட்டோம் என்று ஆவேசமாக கூறினார்.

தொடர்ந்து திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக குற்றம் சாட்டிய அவர், தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் படுகொலை, சேலத்தில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரி மீது கொலை முயற்சி என நேர்மையான அரசு ஊழியர்களுக்கு இந்த ஆட்சியில் உரிய பாதுகாப்பு இல்லை என்றார். 

இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் தஞ்சையில் குப்புசாமி என்ற முதியவரும், விவேக் என்ற இளைஞரும் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என்றார். ஆனால், இந்த மரணங்களை மறைக்க அரசும், காவல்துறை அதிகாரிகளும் முயற்சிப்பதாக அவர் புகார் தெரிவித்தார்.  கள்ளச்சாராய உயிரிழப்புகளை அடுத்து 2 நாளில் ஆயிரத்து  600 பேர் கைது, 2 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது என்றால் அரசுக்கும், காவல் துறைக்கும் தெரிந்தே குற்றங்கள் நடைபெறுகிறதா என அவர் கேள்வி எழுப்பினார்.


புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற தீண்டாமை விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்ற எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் அரங்கேறி வரும் கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த எதிர் கட்சிகளின் கோரிக்கைகளை திமுக அரசு செவிமடுப்பதில்லை என்றார். தமிழ்நாட்டில் ரவுடிகளும், குற்றவாளிகளும் சாதாரணமாக நடமாடுவதாகவும் அவர் அப்போது குற்றம்சாட்டினார்.

அதிமுக ஆட்சியில் கள்ளச் சாராய மரணங்கள் இல்லை என்பது மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிக்கையில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் 75 சதவீத டாஸ்மாக் பார்கள் முறைகேடாக நடைபெறுவதாக கூறினார். குறிப்பாக, சென்னையில்  914 பார்களில், 829 பார்கள் உரிமம் பெறாமல் இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார். 

இதையும் படிக்க:" பொன்னாடை வேண்டாம்; புத்தகமே போதும் " கர்நாடகாவிலும் திராவிட மாடலா ..?