மாத வருமானம் ரூ.60,000 பெறுபவர்கள் ஏழைகளா?...அரசியல் லாபத்திற்காக ஆதரிப்பதா?

மாத வருமானம் ரூ.60,000 பெறுபவர்கள் ஏழைகளா?...அரசியல் லாபத்திற்காக ஆதரிப்பதா?

10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டால், வருங்காலத்தில் சமூகநீதி சீர்குலைந்து போகும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு:

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி 10% இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கில் அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்பட்ட 103-வது திருத்தம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு:

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10% இட ஒதுக்கீடு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக நவம்பர் 12 ஆம் தேதியான இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவதற்கு ஒவ்வொரு சட்டமன்ற கட்சிக்கும் அழைப்பு விடுத்தார். 

கூட்டத்தை புறக்கணித்த அதிமுக, பாஜக:

அதன்படி. சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. ஆனால், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

இதையும் படிக்க: காங்கிரசுக்கு இருக்கும் அக்கறை கூட அதிமுகவிற்கு இல்லையா? 10% இடஒதுக்கீடு இரட்டை வேடமா?

வருங்காலத்தில் சமூகநீதி உருகுலைந்து போகும்:

தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை. 10 சதவீத இடஒதுக்கீடானது, உண்மையில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு ஆனது அல்ல எனக் கூறிய முதலமைச்சர், இதனை ஏற்றுக் கொண்டால், வருங்காலத்தில் சமூகநீதி உருகுலைந்து போகும் எனக் கூறினார். 

அரசியல் லாபத்திற்காக ஆதரிக்கின்றன:

இந்த இடஒதுக்கீட்டை ஒருசில கட்சிகள் அரசியல் லாபத்திற்கு ஆதரிப்பதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர், சமூக நீதியை காப்பாற்றும் பொறுப்பு தமிழகத்துக்கு உண்டு என்றார்.  ஏழைகளுக்கான எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு எதிர்க்காது எனக் கூறினார். நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 252 ரூபாய் வருமானம் பெறுவோர்களை எப்படி ஏழைகள் என அழைக்க முடியும்? என கேள்வி எழுப்பிய முதலமைச்சர், இந்த இடஒதுக்கீட்டால் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கேள்வி எழுப்பிய ஸ்டாலின்:

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை சேர்க்க கூடாது என ஜவஹர்லால் நேரு காலத்தில் பேசப்பட்டது என சுட்டிக்காட்டிய ஸ்டாலின், இடஒதுக்கீட்டால் தகுதி, திறமை போய்விட்டது என விமர்சனம் செய்தவர்கள் 10 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறார்கள். மாத வருமானம் ரூ.60,000 பெறுபவர்கள் ஏழைகளா? எனவும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அனைத்துக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள கட்சிகள், இந்த இடஒதுக்கீட்டை ஏகமனதாக எதிர்க்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தினார்.