நிலக்கரி திட்டம் ... அரியலூர் விவசாயிகள் எதிர்ப்பு...! 

நிலக்கரி திட்டம் ... அரியலூர் விவசாயிகள் எதிர்ப்பு...! 

அரியலூர் மாவட்டதில் உள்ள 4 கிராமங்களில் நிலக்கரி திட்டம் துவங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் விவசாயிகள் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம்  உடையார்பாளையம் தாலுகா கீழ மைக்கேல்பட்டி கிராமத்தை மையமாகக் கொண்டு  பழுப்பு நிலக்கரி திட்டம் துவங்கப்பட உள்ளதாகவும், இதில் அழிசுக்குடி, பருக்கல், வாத்திகுடிகாடு, காக்காபாளையம் கிராம பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர்  நிலத்தில் பழுப்பு நிலக்கரி சுரங்கம் அமைக்க  டெண்டர் கோரப்பட்டுள்ளது. 


இது அப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்பு சுரங்கங்களும் அதனை ஒட்டி சிமெண்ட்  தொழிற்சாலைகளும் அதிகமாவே அமைந்துள்ளன. அதனால் ஏற்படும் சுற்று சூழல் மாசுகளும் லாரி போக்குவரத்தின் ஏற்படும் விபத்து மரணங்களும் தொடர்கதையாகி வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு நிலக்கரி திட்டத்தை அறிவித்துள்ளது அப்பகுதி மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருமானூர் மற்றும் தா. பழூர் ஆகிய ஒன்றிய பகுதிகள் கொள்ளிடம் அற்று நீரின் மூலம் பாசனம் பெரும் பகுதிகளாகும். இங்கு பொன்னாற்று பாசனம், புள்ளம்பாடி  பாசனம், நந்தியாறு பாசனம் என 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆற்றுப் பாசன பகுதியாகும். மேலும் மோட்டார் பாசனத்தை கொண்டு நெல், கரும்பு, காய்கறி, மக்காசோளம் உள்ளிட்டவைகளை  விவசாயிகள் இங்கு சாகுபடி செய்து வருகின்றனர். 

நிலக்கரி திட்டம் செயல்படுத்தப்பட்டால் இங்கு விவசாயத்தை நம்பி உள்ள பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இந்நிலையில் அந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்  இது விவசாயம் நிறைந்த பகுதி என்றும் முந்திரி, எள், கடலை, சோளம், கரும்பு மற்றும் காய்கறிகளான கத்தரி, முருங்கை, முள்ளங்கி, முட்டை கோஸ், உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆகையால் இந்த விவசாய நிலங்களில் பழுப்பு நிலக்கரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு  அறிவித்துள்ளதை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.