தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் - புகைப்படங்கள்

தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் திருவாதிரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் வைபவங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன.
அண்ணாமலையார் திருக்கோயில்:
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சூரியன் தை மாதம் முதல் ஆனிமாதம்வரை சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலத்தினை உத்தராயண புண்ணியகாலம் என்று கூறப்படுகிறது. இந்த உத்ராயண புன்னியகால தொடக்கத்தை முன்னிட்டு இன்று அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகஆராதனைகள் செய்து கோயில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
வடாரண்யேஸ்வர சுவாமி கோயில்:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் ஆருத்ரா அபிஷேகம் நடைபெற்றது. இரவு 9 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை 38 பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இரவு முழுவதும் கண்விழித்து சாமி தரிசனம் செய்தனர்.
ராமநாத சுவாமி கோயில்:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இந்த ஆருத்ரா தரிசனத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரியநாயகியம்மன் கோயில்:
பழநி கோயிலின் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை நான்கு மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு, சிவகாமி அம்பாள், நடராஜ பெருமானுக்கு சோடஷ அபிஷேகங்கள் நடைபெற்றன.
திருக்குற்றாலநாதர் கோயில்:
குற்றாலம் திருக்குற்றாலநாதர் சுவாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், மேலைச்சிதம்பரம் என்று அழைக்கப்படும் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் கனக சபை மண்டபத்தில் எழுந்தருளிய சிவகாமி சமேத நடராஜர், ஆருத்ரா தரிசன காட்சியளித்தார்.