வெளுத்து வாங்கிய கோடை மழை...சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!

வெளுத்து வாங்கிய கோடை மழை...சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டிற்குள்ளே முடங்கினா். இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கோடை மழை வெளுத்து வாங்கி  வருகிறது. 

இதையும் படிக்க : கேரளாவில் பரபரப்பு...திடீரென சொகுசு படகு கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு...பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!

அதன்படி, திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பலத்த இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் மழைநீாில் மெதுவாக ஊர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினா்.  

இதேபோல் வேலூர் மாவட்டத்தில் காட்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை வெளுத்து வாங்கியது. சுமாா் 3 மணி நேரம் நீடித்த இந்த கனமழையால் சித்தூர் பேருந்து நிறுத்தத்தின் இருபுறமும் மழை நீர் குளம் போல் தேங்கியது. மேலும் பல்வேறு இடங்களில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனா். 


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீா்த்தது. தொடா்ந்து பெய்த இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்று மழை காரணமாக திருத்தணி சுற்றுவட்டார கிராமங்களில் சுமாா் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

இதேபோல் கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் வெயில் வாட்டிய நிலையில் திடீரென கனமழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது. மேலும் பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டி தீா்த்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.