சிற்றுண்டி திட்டம் இன்று தொடக்கம்! முதற்கட்டம், தொடக்கப்பள்ளி மாணவர்கள்!

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தொடங்கப்பட்டுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

சிற்றுண்டி திட்டம் இன்று தொடக்கம்! முதற்கட்டம், தொடக்கப்பள்ளி மாணவர்கள்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும்  திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், இத்திட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், இன்று தொடங்கப்பட்டது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிற்றுண்டி திட்டத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டிகளை வழங்கினர். 

மேலும் படிக்க | களத்தில் இறங்கிய திமுக அமைச்சர்கள்..!

இதேபோன்று, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஜைனத் தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. ராஜா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி குத்து விளக்கு ஏற்றி, குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை டாடா சுனாமி குடியிருப்பு நகராட்சி பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் , சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி , ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தனர். 

மேலும் படிக்க | முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டிய ஈபிஎஸ்..! தொடக்கூட முடியாதாம்..!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட 13 தொடக்கப் பள்ளிகளில் இத்திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. கும்பகோணம் கோபு சிவகுருநாதன் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மேயர் , துணை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தனர் 

நெல்லை மாநகர பகுதியில் உள்ள 22 பள்ளிகளில் இன்று காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் சமைக்கப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நெல்லை பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மாநகராட்சி மேயர் சரவணன்  சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். 

மேலும் படிக்க | ”மாணவர்களுக்கு உணவு வழங்குவது செலவல்ல அரசின் கடமை” பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர்..!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முத்தம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சிற்றுண்டி திட்டம் தொங்கப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி ஆகியோர், குழந்தைகளுக்கு உணவு வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் சிற்றுண்டி திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் சிற்றுண்டி திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு உணவு கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கியும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க | குழந்தைகளோடு தரையில் அமர்ந்து உணவு உண்ட முதலமைச்சர்.. காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கி வைப்பு..!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், சட்டமன்ற உறுப்பினர் ராசா  மற்றும் தி..மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர். 

இதேபோன்று, விழுப்புரம் நகராட்சி ஆரம்ப பள்ளியில், காலை சிற்றுண்டி திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகர மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி, தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கல்வியாளர்கள் பலரும் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர். 

மேலும் படிக்க | சில மாநிலங்களில் மறைக்கும் மாடல் ஆட்சி நடைபெறுகிறது..! குஜராத் மாடல் ஆட்சியை விமர்சித்த முதலமைச்சர்..!