விவசாய நிலம் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் :  கிராம நிர்வாக அலுவலர் கைது !!

திருத்தணி அருகே விவசாய நிலம் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.7ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  கைது செய்தனர்.

விவசாய நிலம் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் :  கிராம நிர்வாக அலுவலர் கைது !!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு தாலுகாவைச் சேர்ந்த கிருஷ்ணமராஜாகுப்பம் கிராம நிர்வாக அலுவலராக மணி (51) என்பவர் பணியாற்றி வந்தார். அங்குள்ள கோரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஸ்வநாதன் என்பவர் அவரது தந்தை பெயரில் உள்ள  89 சென்ட் விவசாய நிலத்தை பெயர் மாற்றம் செய்ய பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஜமாபந்தியில் மனு செய்திருந்தார்.

அம்மனு விசாரணைக்காக கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டிருந்தது. பட்டா பெயர் மாற்றம் செய்து தர ரூ.10 ஆயிரம்  தரவேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் கேட்டதாகவும் இருப்பினும் பணம் தர விருப்பம் இல்லாத விவசாயி விஸ்வநாதன் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியபடி அவர்கள் வழங்கிய ரசாயனம் தடவிய ரூபாய் 7ஆயிரம் பணத்தை   கிராம நிர்வாக  அலுவலர் மணியிடம்   வழங்கியபோதுலஞ்ச ஒழிப்புத்துறை டி. எஸ்.பி. கலைச் செல்வம், ஆய்வாளர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக  கைது செய்து அவரிடம் இருந்து ரூபாய் 7ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணியாற்றி வந்த மணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.