அண்ணாமலை மீது முதலமைச்சர் சார்பில் வழக்கு...!!

அண்ணாமலை மீது முதலமைச்சர் சார்பில் வழக்கு...!!

அண்ணாமலை மீது முதலமைச்சர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 14 ஆம் தேதி திமுகவில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் உள்பட பலரின் சொத்து விவரங்கள் குறித்தான தகவல்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். தொடர்ந்து, திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக பல்வேறு கண்டனங்களை தெரிவித்தது. அத்துடன் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலைக்கு நொட்டீஸ் ஒன்றையும் அனுப்பினார். அதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இழப்பீடு தொகையாக 500 கோடி ரூபாய் தர வேண்டும் என்றும், 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், தகுந்த உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து திமுகவின் பல்வேறு அமைச்சர்களும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகிய இருவரும் ஒரே வருடத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடாக சம்பாதித்துள்ளதாக அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியது போல குரல் பதிவு ஒன்றை  இணையதளத்தில் வெளியிட்டார்.  இது அரசியல் வட்டாரத்தில் மேலும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  மாநகர குற்றவியல் வழக்குரைஞர் தேவராஜன் முதலமைச்சர் சார்பில் இந்த அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14 ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் மீது எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பியதாக அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.