ஆளுநரை பதவி நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு..!

ஆளுநர் ஆர்.என் ரவியை பதவி நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆளுநர் - திமுக:
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும், ஆளும் திமுக தரப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. ஆளுநர் தொடர்ந்து இந்துத்துவா குறித்தும், சானதானம் குறித்தும் பேசுவதை ஆளும் திமுக தரப்பு கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. மேலும் திமுக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 7 தமிழ்ர்கள் விடுதலை, நீட் தேர்வு ரத்து, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா போன்றவற்றை கிடப்பில் வைத்திருப்பதிலும் அதிருப்தி நிலவி வருகிறது.
ஆளுநர் நீக்கக் கோரி கடிதம்:
ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என்றும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக கடிதம் எழுதப்பட்டு குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனுவும் வைக்கப்பட்டு உள்ளது.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு:
இந்த நிலையில் ஆளுநரை பதவி நீக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் தஞ்சை பெரியார் திராவிட கழகச் செயலாளர் கண்ணதாசன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சனாதன தர்மம் பற்றியும், திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும் பேசி வருகிறார். தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள கோப்புகளுக்கு உரிய கையெழுத்து போடாமல் கால தாழ்த்துகிறார்; ஆரோவில் பவுண்டேஷன் சட்டத்தின் கீழ் தலைவர் பதவி என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடியது எனக் கூறிப்பிட்டு தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.