தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்...  தமிழக அரசு சார்பில் மரியாதை...

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 116 வது பிறந்தநாள்  இன்று  கொண்டாடப்படுகிறது.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்...  தமிழக அரசு சார்பில் மரியாதை...

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கியதோடு தமிழர்களை மொழியால் இணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என அல்லும் பகலும் பாடுபட்ட ஒரு மாமேதைதான் தமிழர் தந்தை என்று அழைக்கப்பட்ட சி.பா.ஆதித்தனார் அய்யா. 

தமிழ்நாட்டில் பத்திரிக்கை தொடங்கியது முதல், இன்று வரையிலும் பத்திரிக்கை உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரை தமிழ் இதழியல் முன்னோடி என்றே கூறுவது பொருத்தமாக இருக்கும். கூர்வாளால் முடியாததைக் கூட, பேனா முனையால் சாத்தியப்படுத்த முடியும், தனது எழுத்தினால் நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிட முடியும் என்று உலகுக்கு பறைசாற்றியவர் சி.பா.ஆதித்தனார்.

1905-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி என்ற ஊரில் சிவந்தி அதித்தனார் – கனகம் அம்மையாருக்கு மகனாய் பிறந்தவர்தான் சிவந்தி பாலசுப்பிரமணிய ஆதித்தன் அய்யா.

செய்தி என்பது மக்களை விரைவில் சென்றடைய வேண்டும். மக்கள் அதைப் படித்துப் பார்க்கும்போது, உணர்ச்சிவசப்பட வேண்டும். ஏதாவது ஒரு வகையில் மாற்றத்தை நிகழ்த்தி விட வேண்டும். அதனால் தினமும் நடக்கும் செய்திகளை அன்றைக்கே மக்களிடத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று தீவிரமாக சிந்தித்தார். 

ஒவ்வொரு நாளும் இதழ் வெளியாக வேண்டும் என்றால், அதற்கு காகிதம் தயாரிப்பது முதல், அச்சிடுவது, எந்திரச் செலவு, கொண்டு சேர்க்கும் பணி என பெரிய அளவில் மூலதனம் தேவைப்படும் என நினைத்தார். 

இருந்தாலும், மக்களிடம் செய்தியைக் கொண்டு சேர்ப்பதற்கு எப்படியாவது செய்தே தீர வேண்டும் என்று நினைத்து தொடங்கப்பட்ட பத்திரிக்கைதான் தினத்தந்தி.

ஒரு படம் ஆயிரம் சொல்லுக்கு சமம் என்னும் சீனப் பழமொழிக்கு ஏற்ப நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியிட்டார். சி.பா. ஆதித்தனாரின் கொள்கையையே தற்போது மாலைமுரசு மற்றும் தினத்தந்தி ஆகிய நாளிதழ்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. 

படம் நிறைந்த பத்திரிக்கை என்பதோடு, பாமர மக்களும், எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய சொற்கள், சிறிய வாக்கியவங்கள், கவர்ச்சி மிகுந்த தலைப்புகள் மற்றும் கருத்துப் படங்கள் ஆகியவை தற்போது வரையிலும் பயன்படுத்தப்பட்டுத்தான் வருகிறது.

 
சிங்கப்பூரில் இருந்து வந்ததும், நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கி ஆதித்தனார் அய்யா, பல போராட்டங்களில் பங்கு பெற்றுள்ளார். சில சமயங்களில் இதற்காக சிறை சென்றும் இருக்கிறார். 1947-ம் ஆண்டு முதல், 1953-ம் ஆண்டு வரை தமிழக மேலவை உறுப்பினராகவும், பின்னர் 1957 முதல் 1962-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார். 1964-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் மேலவை உறுப்பினரானார். 


பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியில் அமைந்த சட்டபேரவையில் சபாநாயகரானார் அய்யா. சபாநாயகராக பொறுப்பேற்ற ஆதித்தனார், சட்டமன்றத்தில் இருந்தே புதிய மாற்றத்தினை தொடங்கினார். 

அதுவரையில் ஆங்கிலத்தில் இருந்த சட்டமன்ற விதிகளை தமிழில் மாற்றியமைத்ததோடு, சட்டமன்றம் தொடங்குவதற்கு முன்பு, திருக்குறள் ஒன்றைச் சொல்லி தொடங்கும் வழக்கத்தினை ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து கருணாநிதியின் ஆட்சியின் கீழ் கூட்டுறவுத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.  மேலும், போக்குவரத்து, விவசாயம், துறைமுகம் போன்ற துறைகளும் ஒப்படைக்கப்பட்டன. 

ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைத்துறைக்காகவே சிந்தித்துக் கொண்டிருந்தவருக்கு அப்போது உதித்ததுதான் மாலை நேர பத்திரிக்கையான மாலைமுரசு நாளிதழ்.

முந்தைய நாள் இரவு நேரத்தில் இருந்து, இன்று மதியம் வரையிலும் நடக்கும் புத்தம்புதிய சம்பவங்களை செய்திகளாக தொடுத்து, மாலை நேரத்தில் வாசகர்களிடத்தில் கொடுக்க வேண்டும் என்று தொடங்கப்பட்ட மாலைமுரசு நாளிதழ் இன்று வரையிலும் அவர்காட்டிய வழியில் வெற்றிப்பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

தமிழ் மொழியின் புகழையும், தமிழர்களின் பெருமையையும் உலகுக்கு உணர்த்திய ஆதித்தனாரின் புகழுக்கு, வானத்தையும் மதிப்பிட்டு விட முடியாது. சி.பா.ஆதித்தனாரின் கொள்கைகள் என்றும் செழித்தோங்கும், அவரது வழியில் தமிழகம் தழைத்தோங்கும்.