மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்!

மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்!

மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த 4 மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம் செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம் நோய்த்தொற்று மற்றும் அவசர காலங்களில் பணியாற்ற மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் 2021 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இதில் சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை மாற்றி அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திருவள்ளூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

திருவாரூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக இருந்த உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த சுற்று சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் சி.வி.மெய்யநாதன் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.   மேலும், நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து  மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் அவ்வறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:பறவைகள் பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள்!