செங்கல்பட்டு: இறந்ததாய் அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி.. மறுநாள் உயிருடன் வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி..!

தாய் இறந்ததாய் நினைத்து வேறொரு இறந்த மூதாட்டிக்கு இறுதி சடங்கு நடத்திய மகன்..!

செங்கல்பட்டு: இறந்ததாய் அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி.. மறுநாள் உயிருடன் வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி..!

கோயில் செல்லும் மூதாட்டி:

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அம்பேத்கர் நகர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் 72 வயது மூதாட்டியான சந்திரா. இவரது கணவர் சுப்பிரமணி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்ததால், சந்திரா தனது மகன் பராமரிப்பில் வசித்து வருகிறார். சந்திரா அடிக்கடி கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிரார். குறிப்பாக வீட்டருகே  உள்ள சிங்கப் பெருமாள் கோயிலுக்கு சென்று வருவார். 

ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பு:

வழக்கம்போல நேற்று சந்திரா சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். இதற்கிடையில் காலை 8.30 மணிக்கு செங்கல்பட்டு தாம்பரம் இடையிலான ரயில் தண்டவாளத்தில் கூடுவாஞ்சேரி அருகே வயதான மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார். 

தாயை தவறாக அடையாளம் காட்டிய மகன்:

சந்திராவின் உறவினர்கள், அவர் தான் ரயிலில் அடிப்படி உயிரிழந்து விட்டதாக கருதி, அந்த உடலை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். உருவம் ஒத்துப் போனதால், உயிரிழந்தது தனது தாய் என சந்திராவின் மகன் வடிவேலுவும் உறுதி செய்ய, அந்த உடல் உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது. 

இறந்த தாய் வீடு வந்ததால் அதிர்ச்சி:

இதனையடுத்து ஊர் முழுவதும் சந்திரா இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதோடு, தாரை தப்பட்டை வைக்கப்பட்டு, உடலுக்கு அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மறுநாள் காலை அவரது புகைப்படத்தை வைத்து படையல் வைக்கப்பட்டு, உறவினர்கள் சோகத்தில் அமர்ந்திருக்க, இறந்ததாக நல்லடக்கம் செய்யப்பட்ட சந்திரா வீட்டிற்கு உயிருடன் வந்துள்ளார். 

இறந்தது யார் என போலிசார் விசாரணை:

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் ரயிலில் அடிப்பட்டு இறந்தது சந்திரா இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து உயிரிழந்ததாக கருதி அடக்கம் செய்யப்பட்ட நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.