சென்னை: பிரபல உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு கெட்டுப்போன சிக்கன் பிரியாணி..!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை..!

சென்னை: பிரபல உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு கெட்டுப்போன சிக்கன் பிரியாணி..!

பிரியாணி: முன்பு ஒரு காலத்தில் பிரியாணி என்றாலே எங்கேனும் இஸ்லாமியர்கள் திருமணம், ரம்ஜான், பக்ரீத் போன்ற விஷேசங்களில் மட்டுமே கிடைக்கக் கூடிய உணவாக இருந்தது. ஆனால் இன்று வீதிக்கு வீதி ஒரு பெரிய சட்டியில் பிரியாணி விற்கப்படுகிறது. எந்த ஒரு பார்ட்டி என்றாலும் பிரியாணி, துக்கம் என்றாலும் பிரியாணி, எங்கு பார்த்தாலும் பிரியாணி மயமாகி விட்டது. 

ஹோட்டல் அட்டூழியங்கள்: அதே நேரத்தில் சமீப காலங்களில் ஹோட்டல்களில்  கெட்டுப்போன இறைச்சிகள், சுகாதாரமற்ற உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. வட மாநிலத் தொழிலாளார்கள் தான் பானிபூரி, ரஸ்க் என அனைத்திலும் சுகாதரமற்ற முறையில் தயார் செய்து விற்பனை செய்கின்றனர் என்று பார்த்தால், பெரிய பெரிய ஸ்டார் உணவகங்களிலும் அதே நிலை தான். 

வி. ஆர். மாலில் தரமற்ற உணவு: சமீபத்தில் கூட சென்னையில் உள்ள வி.ஆர். என்ற மாலில் இயங்கி வரும் நம்ம வீடு வசந்தபவன் என்ற உணவகத்தில் புழுக்கள் நிறைந்த மாவில் சுடப்பட்ட சோலா பட்டூரா என்ற உணவு குழந்தைக்கு பரிமாறப்பட்டதன் வீடியோ இணையத்தில் வைரலானது. 

ஜூனியர் குப்பன்னா: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது ஜூனியர் குப்பன்னா உணவகம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த உணவகம் இங்கு திறக்கப்பட்டது. அதற்கு முன்னதாக சென்னையில் பல கிளைகளை வைத்திருக்கிறது ஜூனியர் குப்பன்னா. 

கெட்டுப்போன பிரியாணி: இந்த உணவகத்திற்கு விருகம்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் குடும்பத்துடன் சென்றுள்ளார். இரவு 9.30 மணியளவில் சென்ற அவர், சாப்பிட சிக்கன் பிரியாணி, ஆட்டுக்கால் சூப், இட்லி என பல வகையான உணவுகளை ஆர்டர் செய்துள்ளார். அப்போது உணவகம் வழங்கிய சிக்கன் பிரியாணி கெட்டுப்போனதாக இருந்துள்ளது. 

உண்மையை ஒப்புக்கொண்ட உணவகம்: பிரியாணியில் இருந்த சிக்கன் கெட்டுப் போனதை அறிந்த கார்த்தி, உணவக நிர்வாகத்திடம் கேட்ட போது, அவர்களும் இதனை ஒப்புக் கொண்டுள்ளனர். 

பொறுப்பற்ற பதில்: இந்த பிரச்னையை பெரிதாக்காமல் விட்டு விடும் படி அலட்சியப்படுத்தி பேசியுள்ளனர் உணவக நிர்வாகத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்தி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.