மத்திய சிறையில் பொறுப்புத் தலைமை நீதிபதி ஆய்வு!

சிறை கைதிகளின் நிலவரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்

மத்திய சிறையில் பொறுப்புத் தலைமை நீதிபதி ஆய்வு!

சென்னை புழல் மத்திய சிறையில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 8 மாதங்களாக பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா தற்போது பணியாற்றி வருகிறார். அவர் நாளையுடன் பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் அவர் புழல் மத்திய சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த முனீஷ்வர்நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப். 12-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். 

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக( பொறுப்பு) டி.ராஜா கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கடந்த 8 மாதங்களாக பதவி வகித்து வருகிறார்.  அவர் நாளையுடன் (மே 24) பணி ஓய்வு பெற உள்ளார். அவருக்கான பிரிவு உபசார விழா உயர் நீதிமன்ற வளாகத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று திடீரென அவர் புழல் மத்திய சிறையில் ஆய்வினை மேற்கொண்டார்.

அந்த ஆய்வின் போது புழல் சிறை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதாகவும் கைதிகளின் உடல் நலன் மற்றும் அவர்களின் நன்னடத்தை குறித்தும் பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெற்றதாகவும் மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், சிறை துறையில் கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவற்றை கேட்டு அறிந்ததாக தெரிகிறது.

மேலும் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி.ராஜாவை ஏற்கெனவே ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அவரை இடமாறுதல் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கை மற்றும் அவரும் தனது இடமாறுதலை மறுபரிசீலனை செய்யுமாறு விடுத்த கோரிக்கை ஆகியவற்றை பரிசீலித்த மத்திய அரசு, தொடர்ந்து அவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பணியாற்ற அனுமதித்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஏப். 19-ம் தேதி மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.வி.கங்கா பூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரைத்துள்ளது. பரிந்துரையை ஏற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நீதித் துறை வட்டாரத்தில் நிலவுகிறது.

இந்நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியான டி.ராஜா பணி ஓய்வு பெறவுள்ளதால், புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை, அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த நீதிபதியான எஸ்.வைத்தியநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. 

மேலும் டி.ராஜா தனது 8 மாத பதவிக் காலத்தில், உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 13 புதிய நீதிபதிகளுக்கும், 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாகவும் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று புழல் சிறையில் நடந்து ஆய்வில் சிறைத்துறை டிஜிபி முருகேசன் மற்றும் சூப்பிரண்டுகள், கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் சக்திவேல், கொளத்தூர் உதவி கமிஷனர் சிவகுமார், புழல் சரக உதவி கமிஷனர் ஆதிமூலம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிக்க:"கலைஞர் நூற்றாண்டு விழா" திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்!