மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்...ஹெக்டர் 1-க்கு எவ்வளவு தெரியுமா?

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்...ஹெக்டர் 1-க்கு எவ்வளவு தெரியுமா?

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் கொட்டித் தீர்த்த கனமழையால் டெல்டா மாவட்டங்கள் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளிலும் சம்பா மற்றும் மானாவரி பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து, அமைச்சர்கள் தலைமையில் முதலமைச்சர் அமைத்த குழுவினர் பயிர் சேதங்களை ஆய்வு செய்தனர். 

இந்நிலையில், பயிர் சேதம் மற்றும் இழப்பீடு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சக்கரபாணி, தலைமைச் செயலாளர், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதையும் படிக்க : எல்ஐசி, எஸ்பிஐ வங்கிகள் முன்பு காங். கட்சியினர் ஆர்ப்பாட்டம்...!

இதனிடையே, கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சேதமடைந்த பயறு வகைகளுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் 50 சதவிகித மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.