கோவை: பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. பதற்றமான சூழலில் மக்கள்..!

மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு..!

கோவை: பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. பதற்றமான சூழலில் மக்கள்..!

பெட்ரோல் குண்டு வீச்சு:

கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் முன்பாக நேற்றிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இது வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வெடிக்காத நிலையில் கிடந்த பெட்ரோல் குண்டை கைப்பற்றி, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

2 அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல்:

இதேபோல், ஒப்பனக்கார வீதியில் உள்ள பாஜக நிர்வாகிக்கு சொந்தமான துணிக்கடை முன்பாக மர்ம நபர்கள் பெட்ரோல் கொண்டு வீசி உள்ளனர். இருவேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கோவை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2 அரசு பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

போராட்டமும், தனிப்படையும்:

இதனையடுத்து, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து, காந்திபுரம் பகுதியில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைக்குள் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் உறுதியளித்தனர். 

ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு:

இதனையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பாஜகவினர் கலைந்து சென்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் தீவிரவாதம் தலைதூக்கிவிட்டதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து, பதற்றத்தை தணிக்கவும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கவும் கோவை மாநகர் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

பதற்றமான சூழல்:

மாநகருக்குள் வரும் வாகனங்கள் தணிக்கை செய்த பின்பே அனுமதிக்கப்பட்டன. இதனால், கோவை மாநகர் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.