போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்!

போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க, அனைவரும் உறுதியேற்க வேண்டும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விழிப்புணர்வு நாள்: 

போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நாள் நாளை அனுசரிக்கப்பட உள்ளது.  இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில், அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையர்களுடன், போதைப் பொருள் தடுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், அழிவுப்பாதைக்கு வழி வகுக்கும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு, தங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும் எனக்கூறினார். 

போதைப்பொருளை தடுக்க உறுதிமொழி எடுக்க வேண்டும்:

போதைப்பொருள் கடத்தல், விற்பனை, பயன்பாடு ஆகியவற்றை முற்றிலுமாக தடுக்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஆணையர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். போதை என்பது தனிமனித பிரச்சனை அல்ல, சமூக தீமை என்று குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். 

பள்ளி கல்லூரிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மு.க.ஸ்டாலின் உத்தரவு:

போதைப் பொருட்களை மாநிலம் விட்டு மாநிலம் கடத்தி, விற்பனை செய்வோரின் சொத்துகளை முடக்க வேண்டும் என்றும் பேசினார். பள்ளிக் கல்லூரிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி போதைப் பொருள்களை நுழைய விடக்கூடாது என்றும் தெரிவித்தார்.