கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கையும் தயார்: மா.சுப்பிரமணியன்

கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ள 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மற்றும் 80 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கையும் தயார்: மா.சுப்பிரமணியன்

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாகவும், 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதோடு, 80 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைகாக தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்பட்டது என்றும், சென்னை மற்றும் மதுரையில் தலா 500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், கருப்பு பூஞ்சை நோய்கான மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக அவர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

நேற்று தலைமை செயலாளர் தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொரோனா 3ம் அலை தொடர்பாக பொதுமக்களுக்கு பல வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இதுக்குறித்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்ட பின் ஓரிரு தினங்களில் இத்திட்டத்தை முதலமைச்சர் துவங்கி வைப்பார் எனவும் குறிப்பிட்டார்.

தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25% தடுப்பூசிகளில், 10% மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், எனவே பொதுமக்களுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி செலுத்த அதற்கான தொகையை தொண்டு நிறுவனங்கள் மூலம் பெறுவது தொடர்பாக, தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் நாளை கோவை மாவட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.