காற்றில் பறக்க விடப்பட்ட கொரோனா விதிகள் : முகக்கவசம் அணியாமல் குவிந்த மக்கள்!!

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு காரணமாக, இன்று பல்வேறு பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

காற்றில் பறக்க விடப்பட்ட கொரோனா விதிகள் : முகக்கவசம் அணியாமல் குவிந்த மக்கள்!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகளை வாங்க பொது மக்கள் குவிந்து வருகின்றனர். காய்கறி, பழங்கள் விலையில் மாற்றம் ஏதும் இல்லாத பட்சத்திலும் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்க சமூக இடைவெளியை மறந்து போட்டிப் போட்டு கொண்டு பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். மேலும் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜாஜி காய்கறிச் சந்தையில் ஏராளமான பொதுமக்களும், சிறு வியாபாரிகளும் காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கிச் செல்ல காலை முதலே குவிந்து வருகின்றனர். பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் கொரோனா விதிமுறைகளை மீறி வியாபாரத்தில் ஈடுபடுவதால் நோய் தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் திண்டுக்கல் காந்தி காய்கனி மார்க்கெட்டில் பொதுமக்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது. வழக்கமாக காலை நேரங்களில் உள்ள கூட்டத்தை விட இன்று குறைவாகவே காணப்படுகிறது. பொதுமக்கள் காய்கனிகளை வாங்க ஆர்வம் காட்டாத நிலையில் வழக்கமான வியாபாரத்தை விட குறைவான வியாபாரமே நடைபெறுவதாகவும், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று விடுமுறை தினம் என்பதால் வர்த்தகம் எதுவும் நடைபெறவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்

கரூர் அருகே உள்ள கச்சேரி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறும். இதில் அதிக அளவில் பொது மக்கள் காய்கறி வாங்க குவிந்ததால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் முகக் கவசம் அணியாமல் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.