தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை...

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அனைத்து பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை...

தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கடந்த 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று வகின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை அடுத்த கடலாடி கிராமத்தில், அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும், அவரது வீட்டில் உள்ள 5 பேருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர் பாடம் நடத்திய மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் 15 நாளைக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருடன் பயின்ற 17 மாணவிகள் மற்றும் 3 ஆசிரியர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். மாணவியின் தந்தையிடம் இருந்து மாணவிக்கு தொற்று பரவியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில், 10ஆம் வகுப்பு மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பள்ளியைச் சேர்ந்த 120 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது சுகாதாரத்துறையினர் மற்றும் பெற்றோர்களைக் கவலை கொள்ள வைத்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறை சார்பில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாணவர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு உறுதி செய்யப்படும் பள்ளிக்கு சீல் வைக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.