பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் ஊழல் முறைகேடா?  : முதலமைச்சர் இன்று ஆலோசனை!!

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் பல்வேறு புகார்கள் எழுந்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் ஊழல் முறைகேடா?  : முதலமைச்சர் இன்று ஆலோசனை!!

தமிழகம் முழுவதும் இரண்டு கோடி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கக்கூடியவர்களுக்கு கரும்புடன் கூடிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை முடிவடைந்தாலும், இம்மாதம் இறுதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு சர்ச்சைகள் காரணமாக நேரடியாகச் சென்று நியாயவிலைக் கடைகளில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

அதேபோல் நியாயவிலைக் கடைகளில் பொங்கல்  பரிசுத் தொகுப்புகளை வழங்கும் பணிகளை, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.  

இந்த நிலையில், பொங்கல் தொகுப்பு தரமானதாக இல்லை என்றும், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த புகார்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனையில், கொள்முதல் தரம் குறித்தும், மாவட்டம் வாரியாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாகவும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி குறித்தும் முதலமைச்சர் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.