சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு.. எங்க தெரியுமா?

சென்னையில்  இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு.. எங்க தெரியுமா?

சென்னை அடுத்த பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் பதில்:

சென்னையில் பசுமை வழி விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு, விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார்.

அதில், சென்னை அருகே விமான நிலையம் அமைப்பது குறித்து 4 இடங்களை தேர்வு செய்ய வேண்டும் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கோரப்பட்டது. இதன்பின்னர் மத்திய அரசு நடத்திய ஆய்வில், சென்னைக்கு அருகே உள்ள பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய 2 இடங்களில் அதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக முடிவு செய்யப்பட்டது.

தமிழக அரசு முடிவு:

அதன் அடிப்படையில், மக்கள்தொகை, தொழில் நிறுவனங்கள், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் விமான நிலையம் அமைக்க தேவைப்படும் செலவு உள்ளிட்டவற்றை ஒப்பிட்டு பார்க்கையில் பரந்தூரில் இரண்டாவது பசுமை வழி விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது தெரிய வருகிறது.

புதிய விமான நிலையம்:

ஆகவே, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தல அனுமதி கோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.