தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவல்..?

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் மரபணு மாறிய டெல்டா பிளஸ் வைரஸுக்கு 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவல்..?

டெல்டா வைரஸின் மரபணு மாற்றத்தால் உருவாகியுள்ள டெல்டா பிளஸ் திரிபு, தென் ஆப்ரிக்காவில் காணப்படும் பீட்டா வகை வைரஸின் மரபணுக்களையும் உள்ளடக்கியதாக அண்மையில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். 

இதனால் இந்த வைரஸை தற்போது பயன்பாட்டில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாது எனவும், இந்த புதிய வைரஸ் நோய் எதிர்ப்பு திறனையும் முழுவதுமாக அழித்துவிடும் என நோய் தொற்று ஆய்வு நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். இதைத்தொடர்ந்து இந்த வைரஸை அச்சுறுத்தலுக்கு உரியது என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ளது.

தற்போது கோவாக்சின் கொண்டு புதிய வகை வைரஸை அழிப்பது தொடர்பான ஆராய்ச்சியை புனேவில் செயல்படும் மருத்துவ ஆராய்ச்சிய கவுன்சில் முன்னெடுத்துள்ளது. மேலும் தொற்றிலிருந்து மீண்டவர்களின் ரத்தத்தில் உள்ள வெள்ளை நிற திரவத்தை பயன்படுத்தி, தொற்றுக்கு எதிராக உடலில் உள்ள ஆன்டிபாடி எப்படி செயல்படுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்டா பிளஸ் வைரஸ் தமிழகம், மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பரவி இருப்பதாகவும், இதனால் 40 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலங்களில் பரிசோதனை முயற்சியை நடத்துவதோடு, தடுப்பூசிகள் பயன்பாட்டை துரிதப்படுத்தவும் மத்திய அரசு, உத்தரவிட்டுள்ளது.