இந்த ஆண்டும் குலசை தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை- ஆலோசனை கூட்டத்தில் முடிவு.....

உலகப்புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது

இந்த ஆண்டும் குலசை தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை- ஆலோசனை கூட்டத்தில் முடிவு.....

உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தசரா திருவிழா வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

அதனைதொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் அக்டோபர்  15-ம் தேதி நள்ளிரவில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தசரா திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் கோவில் அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருச்செந்தூர் வருவாய்  கோட்டாட்சியர் கோகிலா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை  கூட்டத்தில் தசரா குழுக்களின் நிர்வாகிகள்,  பக்தர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக்கூட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக  தசரா திருவிழா   கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நாட்களான கொடியேற்றம் மகிஷா சூரசம்ஹாரம்  போன்ற முக்கிய நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.  

மேலும் விரதமிருக்கும்  பக்தர்கள் தங்கள் ஊரிலேயே  வேடமணிந்து  தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர். இந்தநிலையில்  தற்போதும் கொரோனோ தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால்  கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும்  தசரா திருவிழா நடத்த அனுமதி அளிக்க வேண்டுமென தசரா குழுக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் தசரா குழுக்களுக்கு காப்புகளை பெறுவதற்கும்  ஒரு குழுக்களுக்கு 5 பேர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கி அனுமதிக்க வேண்டும் என்றும் குழுக்கள் அல்லாத பக்தர்களுக்கு கடந்த ஆண்டை போலவே காப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை  விடுத்தனர்.  

இதனைத்தொடர்ந்து  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக  கடந்த ஆண்டைப் போலவே  கட்டுப்பாடுகளுடன் தசரா திருவிழா நடைபெறுதற்கு  பக்தர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கோட்டாட்சியர் கோகிலா கேட்டுக்கொண்டார். மேலும்  பக்தர்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கும்,  தமிழக அரசுக்கும் விரைந்து  கொண்டு சென்று ஓரிருநாட்களில்  தசரா திருவிழா கட்டுபாடுகள் குறித்த முழு அறிவிப்பு வெளியிடப்படும்  என அவர் தெரிவித்தார்.