ஈஸ்டர் பண்டிகை - தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு...!

ஈஸ்டர் பண்டிகை - தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு...!

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ஆவது நாள் உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி திரளான கிறிஸ்தவர்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த புனித சவேரியார் தேவாலயத்தில் மாவட்ட பேராயர் நசரேன் சூசை தலைமையில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதேப்போன்று சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரில் உள்ள திரு இருதய திருத்தல ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதைத்தொடர்ந்து மெழுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். மேலும், சிலுவையோடு கொடியை கையில் தாங்கியபடி இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.

இதையும் படிக்க : திருப்பரங்குன்றம் பங்குனித் தேரோட்டம் தொடங்கியது...!

இதேப்போல், விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், திருக்கோவிலூர், முகையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.  இந்த வழிபாட்டில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதனைதொடர்ந்து கரூரில் உள்ள புனித தெரசம்மாள் ஆலயத்தில் பட்டாசுகள் வெடித்தும், பாடல்கள் பாடியும், ஜெபம் செய்தும், திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.