தொலைபேசியில் அழைத்தும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை: துரைமுருகன் விமர்சனம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவிற்கு முறைப்படி தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்தும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தொலைபேசியில் அழைத்தும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை: துரைமுருகன் விமர்சனம்

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதியின் படத்திறப்பு விழா சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், கலந்துகொண்டு தலைமை உரையாற்றி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் படத்தை திறந்து வைத்தார்.

 இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை.இந்த நிலையில் இது குறித்து பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சரும்,திமுக பொதுச்செயலாருமான துரைமுருகன்,முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா திட்டமிட்டபோதே முதல்வர் ஸ்டாலின் என்னை அழைத்து, இவ்விழாவில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும், குடியரசுத் தலைவர் அமரும் மேடையில் எதிர்க்கட்சித் தலைவரும் அமர்ந்து வாழ்த்துரையாற்ற வேண்டும் என தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறுங்கள் என்றார்.

 அதன் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு அழைத்தேன். ஆனால், சற்று நேரத்தில் பேரவை செயலாளரை தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டோம் எனக் கூறிவிட்டார். ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் மட்டுமே அனுப்பப்பட்டதால் திமுகவினர் பங்கேற்கவில்லை. ஆனால், நானே தொடர்பு கொண்டு முறைப்படி அழைத்தும் அதிமுகவினர் பங்கேற்கவில்லை என்றார்.