நெல்லையில் இரண்டு பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு...

நெல்லையில் இந்தியா சிமெண்ட் ஆலை வளாகத்தில் இரண்டு பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் இரண்டு பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு...

நெல்லை தாளையூத்து சங்கர் நகரில் இந்தியா சிமெண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களும் ஆயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். கொரனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நெல்லை இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலரை, நிர்வாகம் பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. பலரை குறைந்த நாள் பணிக்கு வருமாறும் நிர்வாகம் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று மாலை பணிக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் வளாகத்தில் இரண்டு பைப் வெடிகுண்டுகளை வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட ஆலை நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்படி தாளையூத்து காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை காவல்துறையினர் செயலிழக்க செய்தனர். மேலும் தொழிலாளர்களில் யாரோ, இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.