செருப்பு மாலை...10 ரூபாய் நாணயம்...வித்தியாசமான முறையில் வேட்பு மனுத் தாக்கல்...!

செருப்பு மாலை...10 ரூபாய் நாணயம்...வித்தியாசமான முறையில் வேட்பு மனுத் தாக்கல்...!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியதையடுத்து, வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

செருப்பு மாலையை அணிந்து வந்து வேட்பு மனுத்தாக்கல் :

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளான இன்று, சுயேட்சை வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர்முகமது என்பவர் செருப்பு மாலையை கழுத்தில் அணிந்தபடி வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இதுவரை 40 தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறிய அவர், 41-வது முறையாக இடைத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தொகுதி மக்களுக்கு செருப்பாக இருப்பேன் என்பதை வலியுறுத்தும் வகையில், செருப்பு மாலை அணிந்து வந்ததாக கூறினார். 

10 ரூபாய் நாணயங்கள் :

இதேபோன்று, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் என்பவர், மகாத்மா காந்தி போன்று, உடை, கண்ணாடி அணிந்து, கையில் தராசுடன் அதில் 10 ரூபாய் நாணயங்களுடனும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.  கியூ. ஆர். கோடு மூலம் தனது பயோடேட்டாவையும் கொண்டு வந்த அவர், 10 ரூபாய் நாணயங்களை எங்கும் வாங்க மறுக்கின்றனர். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், டெபாசிட் தொகையான  10 ஆயிரம் ரூபாயை 10 ரூபாய் நாணயத்தை வழங்கியதாக கூறினார்.

இதையும் படிக்க : எதுக்கு வந்திருகீங்க? யாருக்கு தெரியும்...கட்டாயப்படுத்தி கருத்து கணிப்பு கூட்டத்திற்கு அழைத்து வந்த கட்சியினர்...! 

லஞ்சத்தை ஒழிப்போம் :

இதேபோன்று,  மதுரையைச் சேர்ந்த சங்கர பாண்டியன்  என்பவர் கையில் டம்மி ரூபாய் நோட்டுகளுடன், பணத் தூண்டில் செய்து கொண்டுவந்தார். மேலும், ஓட்டுக்கு பணம் வாங்குவது குற்றம், லஞ்சத்தை ஒழிப்போம் போன்ற விழிப்புணர்வு வாசக போர்டுகளுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.  

தேர்தல் மன்னன் :

இவரைத் தொடர்ந்து தேர்தல் மன்னன் பத்மராஜன் 233-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். சேலம் மேட்டூரை சேர்ந்த இவர்,  எங்கு எப்போது தேர்தல் நடந்தாலும், தேர்தலில் போட்டியிடுவதை தனது லட்சியமாகக் கொண்டுள்ளார். இவர் இதுவரை, 6 முறை குடியரசுத் தலைவர் தேர்தல், 6 முறை துணை குடியரசுத் தலைவர் தேர்தல்,  உள்ளிட்ட மக்களவை, சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என 232- முறை தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் மன்னன் என்று பெயரெடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது, 233-வது முறையாக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  

பின்னோக்கி நடந்த வந்து வேட்பு மனுத்தாக்கல் :

இதேபோன்று, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த  மனிதன் என்பவர் வினோதமான முறையில் பின்னோக்கி நடந்து வந்து  வேட்பு மனு தாக்கல் செய்தார். கடந்த 32 ஆண்டுகளாக பின்னோக்கி நடந்து செல்லும் இவர், குடியரசு தலைவர் ஆன பிறகுதான் முன்னோக்கி நடப்பேன் என்றும் கூறினார். இவரின் பேச்சு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.