பட்டாசு ஆலை தீ விபத்தில் சிக்கி - 3 பேர் பலியான சோகம்...

கடலூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தாருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பட்டாசு ஆலை தீ விபத்தில் சிக்கி - 3 பேர் பலியான சோகம்...

கடலூர் எம்.புதூர் பகுதியில் காரைக்காடு பகுதியை சேர்ந்த வனிதா மோகன்ராஜ் என்பவர் நாட்டு வெடி மற்றும் வானவெடி தயார் செய்யும் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் 7 பேர் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.  இன்று பிற்பகல் எதிர்பாராதவிதமாக இந்த பட்டாசு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்ததுடன், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில்  உயிரிழந்த சத்யராஜ், அம்பிகா, சித்ரா ஆகிய 3 பேரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் வெடி விபத்து குறித்து நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டார். 

இதனிடையே, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் காயம் அடைந்த நெல்லிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த வசந்தாவுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.