குடியரசுத் தலைவர் வருகையையொட்டி விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு...

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி சென்னை முழுவதும் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு...

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் கருணாநிதி உருவப்பட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார்.டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12 மணியளவில் சென்னை வருகிறார். 

இதனைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு செல்லும் அவர், 75வது சுதந்திர ஆண்டை குறிக்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் உள்ள நினைவு தூண் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.பின்னர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் படத்திறப்பு விழாவில், கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார்.

இதையொட்டி, சென்னையில் 3 அடுக்கு பாதுகாப்பும், விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.மேலும் விமான நிலையம் முதல் ஆளுநர் மாளிகை மற்றும் தலைமைச் செயலகம் வரையிலும் மொத்தமாக 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக குடியரசுத் தலைவர் செல்லக்கூடிய சாலைகளில் போலீசார் நடத்திய ஒத்திகை நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள், ஜாமர் கருவி பொருத்திய வாகனங்கள், அவசர கால ஊர்திகள் பங்கேற்றன. இதனைத்தொடர்ந்து 3ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் செல்லும் குடியரசுத் தலைவர், அங்கிருந்து உதகை செல்கிறார்.பின்னர், 4ஆம் தேதி உதகை ராணுவ கல்லூரி அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அதை தொடர்ந்து, 5ஆம் தேதி உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடும் அவர், 6ஆம் தேதி கோவை சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.  குடியரசு  தலைவரின் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் முழுவதும்  பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு, மதுரை, நாமக்கல், உள்ளிட்ட 9 மாவட்டங்களிருந்து சுமார் 1300 க்கும் மேற்பட்ட போலீசார் நீலகிரியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு  பணிக்கு  பல பகுதிகளுக்கு அனுப்பி  வைக்கப்பட்டனர்.