இந்தியாவிலேயே முதல் முறையாக  மதுரவாயல்-துறைமுகம் இடையே  இரண்டு அடுக்கு பறக்கும் சாலை...

இந்தியாவிலேயே முதல் முறையாக  மதுரவாயல்-துறைமுகம் இடையே  இரண்டு அடுக்கு பறக்கும் சாலை அமையவுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார். 

இந்தியாவிலேயே முதல் முறையாக  மதுரவாயல்-துறைமுகம் இடையே  இரண்டு அடுக்கு பறக்கும் சாலை...

கடந்த 2007-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர் சரக்கு போக்குவரத்து தடையின்றி செல்லவும் ஆயிரத்து 815 கோடி ரூபாய் செலவில் மதுரவாயல்-சென்னை துறைமுகம் இடையே கூவம் ஆற்றின் வழியே மேல்மட்ட பறக்கும் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. 

2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த நிலையில், கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாக கூறி, பறக்கும் சாலைக்கான கட்டமைப்பு பணிகளுக்கு தடை  விதிக்கப்பட்டது.ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர், இத்திட்டம் மீண்டும் துவக்கப்படும் என்று அறிவித்தார். 

அதன் படி,சென்னை துறைமுகத்தில் தொடங்கி சிந்தாதரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு வழியாக மதுரவாயலில் முடிவடையும் இந்த சாலைக்காக மொத்தம் 6 ஆயிரத்து 993 சதுர மீட்டர் தனியார் நிலமும், 2 ஆயிரத்து 722 சதுர மீட்டர் அரசு நிலமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உயர்மட்ட சாலை அமையவுள்ள மொத்த தூரத்தில் கூவம் ஆற்றில் வருகின்ற 10 கிலோமீட்டர் தூரம், கடற்கரை ஒழுங்காற்று மண்டலத்திற்குள் வருவதால் இத்திட்டத் திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டு, அனுமதியும் பெறப்பட்டது. 

இந்த நிலையில் மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக அமைக்கப்பட உள்ளதாகவும்,ஆறு வழிச்சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.கூடுதல் எடையுடன் வாகனங்கள் செல்வதற்கு ஏற்றாற்போல நவீன தொழில் நுட்பத்துடன் பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மூன்று மாதத்தில் பணிகள் துவங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.