ஸ்மார்ட் சிட்டி பணிகளில் முறைகேடா..? முடிந்தால் நிரூபியுங்கள்... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சவால்...

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றும், சட்டம் உங்கள் கையில் இருக்கிறது முடிந்தால் முறைகேடு நடைபெற்றதை நிரூபியுங்கள் எனவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி பணிகளில் முறைகேடா..? முடிந்தால் நிரூபியுங்கள்... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சவால்...

தந்தை பெரியார் 143 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்திக்கையில் அவர் பேசியவை :

மதுரையில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு முன்னாள் அமைச்சர்கள் காரணம் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்தார்.

"மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. சட்டம் உங்கள் கையில் இருக்கிறது முடிந்தால் நடவடிக்கை எடுத்து மக்கள் முன்பு நிறுத்துங்கள்.
பல்லாயிரம் கோடி மதிப்பிலான மக்கள் நல திட்டங்களை பொத்தாம் பொதுவாக குறை சொல்ல கூடாது. அதிமுக ஆட்சியில் பல்வேறு பாலங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

நிதி அமைச்சர் தொகுதியில் தான் கடந்த ஆட்சியில் 75% பணிகள் நடைபெற்று உள்ளன. அவர் இப்படி தவறாக பேசுவதால் மக்கள் தான் அவரை தவறாக நினைப்பார்கள்.
பெரியார் பேருந்து நிலையம் தவறான திட்டத்தில் கட்டப்பட்டால் உலக வங்கி நிதி கொடுத்து இருப்பார்களா?

அந்த திட்டம் குறித்த எந்த விவரமும் எனக்கு தெரியாது, அது குறித்து எங்களுடைய கவனத்திற்கு வரவில்லை. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என அமைச்சர் பேச கூடாது" என்றார்.

அமைச்சர் கேசி வீரமணி வீட்டில் நடத்தப்பட சோதனை குறித்து பேசியவர், "ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரெய்டு நடப்பது வழக்கம் தான். தவறு இருந்தால் அவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும். எங்களுக்கு மடியில் கணமில்லை, எனவே வழியில் பயமில்லை" என்றார்.