ஜாமீனில் வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!!

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3 கோடி மோசடி செய்ததாக கைதான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஜாமீனில் வெளியே வந்தார்.

ஜாமீனில் வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் 4 வார காலத்திற்கு இடைக்கால ஜாமீன் அளித்து நேற்று உத்தரவிட்டது. 

இதனையடுத்து இன்று காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  ஜாமீனில் வெளிவந்தார். ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, 9 புகார்கள் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம்  கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார்.

20 நாட்களாக 8 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில், கடந்த  5-ம் தேதி  கர்நாடகாவில் ஹாசன் நகரில் ராஜேந்திர பாலாஜியை சுற்றி வளைத்து காவல்துறை கைது செய்தது. 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து, மதுரை மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களால், அவர் திருச்சி மத்திய சிறையில் கடந்த 6ஆம் தேதி மதியம் அடைக்கப்பட்டுள்ளார்.

முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம்  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.  இந்த நிலையில் நேற்று  உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

மேலும் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சி செய்யக் கூடாது என்று நிபந்தனை விதித்து ராஜேந்திர பாலாஜி மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து நேற்று ஜாமீன் தரப்பட்டது. இதனை அடுத்து திருச்சி மத்திய சிறையில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளி வந்தார். அவர் தனது பாஸ்போர்ட்டை விருதுநகர் மாவட்ட காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும், மேலும் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.